இணையத்தைக் கலக்கும் #CMVijayMeetsPMModi.. என்ன பேசினார் விஜய்?!
புதுடெல்லியில் இன்று நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இடையேயான முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பின் முக்கியப் புகைப்படத்தைப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை விஜய் சந்திப்பது இதுவே முதல்முறை என்பதால், இந்தப் புகைப்படம் இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் தொடக்கமாக, பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்து வழங்கித் தனது வாழ்த்துகளையும் மரியாதையையும் தெரிவித்துக் கொண்டார்.
பிரதமரும் புன்னகையுடன் முதலமைச்சர் விஜய்யை வரவேற்றுத் தனது வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார். இந்தத் தருணத்தில் எடுக்கப்பட்ட உயர்தரப் புகைப்படத்தையே பிரதமர் அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளது.

மரியாதை நிமித்தமான வாழ்த்துப் பகிர்வுகளுக்குப் பிறகு, தமிழகத்தின் மிக முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்த விரிவான கோரிக்கைக் கடிதத்தைப் பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் நேரில் வழங்கினார். தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் இந்தப் புகைப்படத்தை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே, தவெக தொண்டர்கள் மற்றும் சினிமா, அரசியல் ரசிகர்கள் எனப் பலரும் இதனைச் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கத் தொடங்கிவிட்டனர்.
புதிய முதலமைச்சரின் டெல்லி பயணமும், பிரதமருடனான இந்த இணக்கமான சந்திப்புப் புகைப்படமும், தேசிய அளவில் தமிழக அரசியல் நகர்வுகளை உற்றுநோக்க வைத்துள்ளது.
