சரிந்த கல்வி சாம்ராஜ்யம்... பைஜூ ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறை... சிங்கப்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸின் நிறுவனர் பைஜூ ரவீந்திரனுக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. வியக்கத்தக்க வேகத்தில் தனது சாம்ராஜ்யம் சரிந்து வரும் நிலையில், அவருக்கு ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான சட்டரீதியான அடியாக இது அமைந்துள்ளது என ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவிக்கிறது. ரவீந்திரன் தனது சொத்துக்கள் தொடர்பான பல உத்தரவுகளை மீறியுள்ளார் என்றும், இந்த விதிமீறல் ஏப்ரல் 2024 முதலே தொடர்ந்து இருந்து வருகிறது என்றும் நீதிமன்ற விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி அவர் உடனடியாக அதிகாரிகளிடம் சரணடையவும், S$90,000 ($70,500) நீதிமன்றச் செலவுகளைச் செலுத்தவும் சிங்கப்பூர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தொடர்புடைய ஒரு நிறுவனத்தில் பங்குகளை வைத்திருந்த Beeaar Investco Pte என்ற பெருநிறுவனத்தின் மீதான தனது சட்டப்பூர்வ உரிமையை நிலைநாட்டும் ஆவணங்களை வழங்கவும் அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பைஜூஸ் நிறுவனம் ஏற்கனவே ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து கொண்டிருந்த காலகட்டத்தில், அந்நிறுவனத்திற்கான நிதி திரட்டும் சுற்றில் பங்கேற்ற கத்தார் முதலீட்டு ஆணையத்தின் துணை நிறுவனமான கத்தார் ஹோல்டிங்ஸ் மூலம் இந்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் தொடரப்பட்டன.

திங்க் அண்ட் லேர்ன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நிறுவியதன் மூலம் இந்தியாவின் ஸ்டார்ட்அப் சூழலில் கோடீஸ்வரராகக் கொண்டாடப்பட்ட ரவீந்திரனின் கதை தற்போது முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அவருக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளதுடன், வாராக்கடனான 1.2 பில்லியன் டாலர் கடனால் ஏற்பட்ட இழப்புகளை மீட்பதற்காகக் கடன் வழங்குநர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். தற்போதைய சூழலில் அவர் சிங்கப்பூரில் இருக்கிறாரா அல்லது வேறு எங்கு இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை .
