சென்னையைக் காப்பாற்றிய கமிஷ்னர்... பெருமழையில் களத்திற்கு வராத முதல்வர், அமைச்சர்கள்!
சென்னை மாநகராட்சியில் பெய்த கனமழையின்போது அமைச்சர்கள் களத்தில் இறங்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ள நிலையில், மாநகராட்சி ஆணையர் சமீரன் உள்ளிட்ட அதிகாரிகளின் துரித நடவடிக்கையே சென்னையைக் காப்பாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கும்போது அமைச்சர்களும் அதிகாரிகளும் இணைந்து கள ஆய்வு மேற்கொள்வது வழக்கமான ஒன்றாகும். இருப்பினும், தற்போதைய மழையின்போது அமைச்சர்களின் நேரடி களப்பணி குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேசமயம், சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் இரவு முழுவதும் தூங்காமல் களத்தில் நின்று பணியாற்றியுள்ளார்.

பாரிமுனையில் 36.3 செ.மீ வரை வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டியபோதிலும், ஆணையரின் நேரடிக் கண்காணிப்பில் 15,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், 650 மோட்டார் பம்புகள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் காரணமாக, காலத்திற்குள் அனைத்துச் சுரங்கப்பாதைகளும் திறக்கப்பட்டு, பெரிய அளவிலான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டு மாநகரம் பாதுகாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
