“அடுத்த 30 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாது... ரூ.8,941 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து அமித் ஷா பேச்சு!
புதுடெல்லியில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், ரூ.8,941.22 கோடி மதிப்பிலான 43 டெல்லி ஜல் வாரிய குடிநீர் மற்றும் கழிவுநீர் உள்கட்டமைப்புத் திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் உரையாற்றினார்.

டெல்லியில் யமுனை நதியில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதைத் தடுத்து, நதியை மீட்கும் நோக்கில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் ஓக்லா பகுதியில் ரூ.1,161 கோடியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், மற்றும் ஏற்கனவே உள்ள 8 சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல் போன்ற முக்கியப் பணிகள் அடங்கும்.
டெல்லியின் வெளிப்பகுதிகளில் 29 பரவலாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பம்பிங் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதன் மூலம் அனுமதியற்ற 358 குடியிருப்புகள் மற்றும் 113 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 36.29 லட்சம் மக்கள் பயனடைவர். மேலும், 1,034 கி.மீ. தூரத்திற்குப் புதிய கழிவுநீர் குழாய் வலையமைப்பும் அமைக்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடினார். எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்கள் மற்றும் எதிர்மறை அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், மக்களின் தீர்ப்பை வீதிக்கு வந்து மாற்ற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், காங்கிரஸின் இந்த தவறான அரசியலால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு அக்கட்சியால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்றும் அவர் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
