55 ஆண்டுகளாக ‘உதயசூரியன்' உதிக்காத தொகுதி... திமுக தொண்டர்களின் ஏக்கம் கைகூடுமா?!

 
ஸ்டாலின் தேர்தல் தமிழகம் ஸ்டாலின் தேர்தல் தமிழகம்

தமிழக அரசியலில் கோட்டை எனக் கருதப்படும் தஞ்சை மண்டலத்தில், திமுகவுக்கு கடந்த 55 ஆண்டுகளாகப் பெரும் சவாலாக இருந்து வரும் தொகுதி 'பாபநாசம்'. 1971-க்குப் பிறகு இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் யாரும் நேரடியாக வெற்றி பெறவில்லை என்ற வரலாறு, இந்த முறை மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாபநாசம் தொகுதியின் தேர்தல் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், அது காங்கிரஸ் மற்றும் அதிமுகவின் பலமான தளமாகவே இதுநாள் வரையில் இருந்து வந்துள்ளது.  1952 முதல் 1967 வரை காங்கிரஸ் கட்சியின் வசம் இருந்தது. 1971ல் திமுக வேட்பாளர் கணபதி வெற்றி பெற்றார். அதுவே இந்தத் தொகுதியில் திமுக நேரடியாகப் பெற்ற முதலும், கடைசியுமான ஒரே வெற்றி. 2006, 2011, 2016 எனத் தொடர்ந்து மூன்று முறை அதிமுகவே இங்கு வெற்றி வாகை சூடியது.

ஸ்டாலின் திமுக

கடந்த 2021 தேர்தலில், திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சின்னம் திமுகவினுடையதாக இருந்தாலும், வேட்பாளர் மாற்றுக்கட்சி என்பதால் 50 ஆண்டுகால திமுகவின் நேரடி வெற்றிப் பசி இன்னும் அடங்கவில்லை. இந்நிலையில் வரும் ஏப்ரல் 23-ல் நடைபெறவுள்ள தேர்தலில், மீண்டும் பாபநாசம் தொகுதியை மனிதநேய மக்கள் கட்சி கோரி வருகிறது. ஆனால் உள்ளூர் திமுக நிர்வாகிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக தேர்தல் ஸ்டாலின் திமுக

"கடந்த முறை உதயசூரியன் சின்னம் வெற்றி பெற்றுவிட்டது. இப்போது தளம் சாதகமாக இருப்பதால், திமுக வேட்பாளரே நேரடியாகப் போட்டியிட வேண்டும்" என்பது தொண்டர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இம்முறை திமுக நேரடியாகக் களம் இறங்கினால், 55 ஆண்டுகாலச் சாதனையை முறியடித்துக் காப்போம் என நிர்வாகிகள் மேலிடத்திற்குத் தகவல் அனுப்பியுள்ளனர். ஜவாஹிருல்லா தற்போதைய எம்.எல்.ஏ என்பதால், அவருக்கு மீண்டும் அதே தொகுதியை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக தலைமை உள்ளது.