தவெக ஆட்சிக்கவிழ்ப்புச் சதி.. எம்.எல்.ஏ.விடம் ரூ.35 கோடி பேரம்.. மேலும் 4 பேர் கைது.. 9 பேரிடமும் தீவிர விசாரணை!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ டாக்டர் என். இளையராஜாவிடம், சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ரூ.35 கோடி பேரம் பேசிய விவகாரத்தில், தற்பொழுது மேலும் 4 பேரைச் சென்னை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் 'ஐபிடிஎஸ்' கருத்துக்கணிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சி நரேஷ் உள்ளிட்ட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து இந்த சதித் திட்டத்தில் தொடர்புடைய ரமேஷ், சீனிவாசன், செல்வம் மற்றும் மற்றொரு நபர் என மேலும் 4 பேரை போலீஸார் தற்பொழுது கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைதானவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

தலைமறைவாக இருந்த இந்த 4 பேரும் கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட சில பகுதிகளில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களது மொபைல் சிக்னல்களைக் கண்காணித்து வந்த சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் மற்றும் சைபர் க்ரைம் தனிப்படையினர், இவர்களை ரகசியமாகச் சென்னைக்கு வரவழைத்து இன்று காலை முறைப்படி கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சட்டமன்றத்தில் தவெக அரசைக் கவிழ்க்கும் நோக்கில் இந்த குதிரை பேரம்அரங்கேறியதாகத் தவெக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சபாநாயகருக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்தின் போது தவெக-வுக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக ரூ.35 கோடி தருவதாகவும் கூறி எம்.எல்.ஏ இளையராஜாவுக்கு ஆசை வார்த்தை காட்டப்பட்டுள்ளது.

இதற்கு இளையராஜா மறுப்புத் தெரிவித்த போது, இந்த விபரங்களை வெளியே கூறினால் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜூன் 29 அன்று சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள இந்த புதிய நபர்களிடம் நடத்தப்படும் தீவிர விசாரணையின் மூலம், இந்த ஆட்சிக்கவிழ்ப்புச் சதியின் பின்னணியில் டெல்லி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த எந்தெந்த முக்கிய அரசியல் புள்ளிகள் இருக்கிறார்கள் என்ற விபரங்கள் முழுமையாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
