தவெக மாவட்ட செயலாளர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

 
தவெக

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற தவெக விக்கிரவாண்டி மாநாட்டையொட்டி, அனுமதியின்றி பேனர் வைத்த வழக்கில் நாகை தவெக மாவட்ட செயலாளர் சுகுமாரைக் குற்றவாளி என நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின்முதலாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டிற்காகப் புத்தூர் ரவுண்டானா பகுதியில் அரசு மற்றும் காவல் துறையின் முறையான அனுமதியின்றி விளம்பரப் பேனர்கள் வைக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைத்ததாக, நாகை தவெக மாவட்ட செயலாளர் சுகுமார் மீது உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, அனுமதியின்றி பேனர் வைத்த குற்றத்திற்காகச் சுகுமாரைக் குற்றவாளி என அறிவித்துத் தீர்ப்பளித்தார்:

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சுகுமாருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை அல்லது 2,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.