ஆண் வாரிசு ஆசையில் கொடூரம்... கர்ப்பிணி மனைவி, 2 மகள்களை படுகொலை செய்த கணவன்!
தெலங்கானா மாநிலம் ஹனம்கொண்டா மாவட்டத்தில், இன்னும் மாறாத 'ஆண் வாரிசு' மோகத்தால் ஒரு குடும்பமே அநியாயமாகப் பலியாகியுள்ளது. தனது சொந்த இரத்தங்களையே கொன்ற அஸ்ஹருதீன் என்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை, ஹனம்கொண்டா அருகே உள்ள ஒரு நீச்சல் குளத்தில் ஒரு பெண்ணும், அவரது இரண்டு பெண் குழந்தைகளும் சடலங்களாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலங்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதலில் இது தற்கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், பெண்ணின் கணவர் அஸ்ஹருதீனிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் அம்பலமானது:
அஸ்ஹருதீனுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது அவரது மனைவி மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். வயிற்றில் வளர்வது மீண்டும் பெண் குழந்தையாகத்தான் இருக்கும் என அஸ்ஹருதீன் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
ஆத்திரத்தில் இருந்த அஸ்ஹருதீன், நேற்று காலை தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களையும் வலுக்கட்டாயமாக நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களை உள்ளே தள்ளிக் கொலை செய்துள்ளார்.

மனைவி கர்ப்பிணி என்று கூடப் பார்க்காமல், இரண்டு குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த அஸ்ஹருதீனை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை வழக்கு மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
