பச்சிளங்குழந்தையை வயல்வெளியில் வீசி சென்றக் கொடூரம்... சிகிச்சைக்குப் பின் காப்பகத்தில் ஒப்படைப்பு!
கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வயல்வெளியில் கட்டைப்பையில் வீசப்பட்டிருந்த பச்சிளம் பெண் குழந்தையைக் காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சைக்குப் பிறகு, அக்குழந்தை தற்போது குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வயல்வெளியில், கடந்த நவம்பர் 19-ஆம் தேதி கட்டைப்பை ஒன்று கிடந்துள்ளது. அதிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டதையடுத்துச் சோதனை செய்தபோது, பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று அதில் வீசப்பட்டிருந்தது தெரிய வந்தது.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையைப் பத்திரமாக மீட்டு உடனடியாகக் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்குக் குழந்தைக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு நலமடைந்த நிலையில், தற்போது அக்குழந்தை பாதுகாப்பாகக் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பச்சிளம் பெண் குழந்தையை இரக்கமின்றி கட்டைப்பையில் வைத்து வயல்வெளியில் வீசிச் சென்ற கல்நெஞ்சம் கொண்டவர்கள் யார் என்பது குறித்துக் கள்ளக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய பேருந்து நிலையம் மற்றும் வயல்வெளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கைப்பற்றிப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
