வேலைக்கு சேர்ந்த மறுநாளே துயரம்... ஜிப்லைன் சாகசக் கயிற்றிலிருந்து கீழே விழுந்து ஆபரேட்டர் உயிரிழப்பு!
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள பிரபல பொழுதுபோக்குப் பூங்காவில், ஜிப்லைன் ஆபரேட்டராகப் பணியில் சேர்ந்த மறுநாளே இளம் ஊழியர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
காசர்கோடு மாவட்டம் சாமுண்டிகுன்னு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் சனூப் (25) ஆவார். இவருக்கு ஜானகி என்ற தாயாரும், ஷரத் மற்றும் ஷ்யாம் ஆகிய இரண்டு சகோதரர்களும் உள்ளனர். இவர் ராணிபுரத்தில் உள்ள சுற்றுலா மையத்தில் ஜிப்லைன் ஆபரேட்டராகப் புதிதாகப் பணியில் சேர்ந்திருந்தார். பணிக்குச் சேர்ந்த மறுநாளே இவர் இந்தத் துயர விபத்தைச் சந்தித்துள்ளார்.
சனூப் சுற்றுலாப் பயணிப் பெண் ஒருவரை ஜிப்லைன் சாகசத்திற்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவர் உரிய பாதுகாப்பு கயிற்றை அணியவில்லை என்று கூறப்படுகிறது. சாகசத்தின் போது ஏற்பட்ட பயத்தின் காரணமாக அந்தப் பெண் எதிர்பாராத விதமாகச் சனூப்பின் சட்டையைப் பிடித்து இழுத்துள்ளார். இதனால் நிலைதடுமாறிய சனூப் ஜிப்லைனில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்து படுகாயமடைந்த சனூப்பை உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். புதிய வேலையில் இணைந்து தனது வாழ்க்கையைத் தொடங்கவிருந்த இளைஞர் ஒருவர் எதிர்பாராத விபத்தில் உயிரை இழந்த இச்சம்பவம் அவரது குடும்பத்தினரையும் சக ஊழியர்களையும் கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
