ஜனநாயகன் லீக் சர்ச்சை முடிவு... பிரதீப் ராகவ் மீதான தடை நீக்கம் - 'தலைவர் 173' படத்தில் என்ட்ரி!

 
ஜனநாயகன் பிரதீப் ராகவ்

'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியான விவகாரத்தில் சிக்கி, ரெட் கார்டு மற்றும் தற்காலிக இடைநீக்க நடவடிக்கையை எதிர்கொண்ட பிரபல படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் மீதான ஒழுங்கு நடவடிக்கையைத் தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர்கள் சங்கம் வாபஸ் பெற்றுள்ளது. இந்தத் தடையற்ற விடுவிப்பைத் தொடர்ந்து, தமிழ்த் திரையுலகின் மிகப்பெரிய 'மெகா' ப்ராஜெக்ட் ஒன்றில் அவர் ஒப்பந்தமாகியிருப்பது ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

'ஜனநாயகன்' படத்தின் எடிட்டிங் பணிகளின் போது சங்க விதிமுறைகளை மீறி, உறுப்பினர் அல்லாத உதவியாளர்களைப் பயன்படுத்தியதாகவும், அதன் விளைவாகவே படம் இணையத்தில் கசிந்ததாகவும் கூறி கடந்த ஏப்ரல் மாதம் பிரதீப் ராகவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக எடிட்டர் பிரதீப் ராகவ், படத்தொகுப்பாளர்கள் சங்கத்திடம் முறையான விளக்கம் அளித்து, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.  இனிவரும் காலங்களில் சங்கத்தின் அனைத்துச் சட்டதிட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பதாகப் பிரதீப் ராகவ் உறுதியளித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட சங்கத் தலைவர் கோபி மற்றும் செயற்குழுவினர், அவர் மீதான இடைநீக்க நடவடிக்கையை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

தடை நீக்கப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே பிரதீப் ராகவ் திரையுலகிற்கு மாஸான மீள்வருகை கொடுத்துள்ளார். கமல்ஹாசனின் 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்' தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 173' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று  வெளியானது. 'தர்மன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட திரைப்படத்தின் முக்கியப் படத்தொகுப்பாளராக  பிரதீப் ராகவ்  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'கோமாளி', 'லவ் டுடே', 'கருடன்' போன்ற வெற்றிப் படங்களின் எடிட்டரான பிரதீப் ராகவ், சங்கம் விதித்த தடைகளைத் தாண்டி  ரஜினியின் படத்தில் இணைந்திருப்பது அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.