சிதறுகிறது திமுக கூட்டணி... உறுதியானது இடதுசாரிகளின் ஆதரவு... தவெக-வின் பலம் 116-ஆக உயர்வு!
தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கத் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் எடுத்து வரும் முயற்சிகளுக்குப் மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் (CPIM) தவெக-விற்குத் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்கு அளித்துள்ளனர். தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக ஆட்சி அமைப்பதே ஜனநாயகத்திற்கு அழகானது."

"தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து தனது முழுமையான ஆதரவை வழங்குகிறது." இடதுசாரி கட்சிகளின் இந்த அதிரடி முடிவால், தவெக தலைவர் விஜய்யின் பலம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி தவெக (108) + காங்கிரஸ் (5) + சிபிஐ (1) + சிபிஎம் (2) = 116 எம்.எல்.ஏ-க்கள். தேவையான பலம்: 118. இன்னும் வெறும் 2 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே.

காங்கிரஸைத் தொடர்ந்து இடதுசாரிகளும் விஜய்யின் பக்கம் சாய்ந்துள்ளதால், திமுக தலைமையிலான கூட்டணி ஏறத்தாழச் சிதைந்துவிட்டது. இந்த 116 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்களுடன் இன்று மாலை 4:30 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய். இன்னும் 2 இடங்கள் மட்டுமே தேவைப்படுவதால், சுயேச்சைகள் அல்லது சிறிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பது இனி காலத்தின் கட்டாயம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
