காங்கிரஸாரை அடித்து விரட்டிய திமுகவினர்... மயிலாடுதுறையில் பயங்கரம்!
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த விவகாரத்தில், திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே நிலவி வந்த மோதல், தற்போது நேரடித் தாக்குதலாக மாறியுள்ளது. மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினரை திமுகவினர் விரட்டி விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க மறுக்கும் ஆளுநரின் போக்கைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் திரண்டு ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த திமுகவினர், காங்கிரஸாரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். "திமுக கூட்டணியில் இருந்து 5 இடங்களை வென்றுவிட்டு, இப்போது விஜய்க்கு ஆதரவு கொடுப்பதா?" எனக் கேட்டு ஆத்திரமடைந்த திமுகவினர், காங்கிரஸ் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சரமாரியாகத் தாக்கி அங்கிருந்து விரட்டியடித்தனர்.
திமுக-வின் தயவால் வெற்றி பெற்றுவிட்டு, தற்போது தார்மீக அடிப்படையில் தங்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் காங்கிரஸ் மீது திமுகவினர் கடும் கோபத்தில் உள்ளனர். இந்த ஆத்திரத்தின் வெளிப்பாடாகவே மயிலாடுதுறை சம்பவம் பார்க்கப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் காயமடைந்துள்ள நிலையில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நாடாளுமன்றத்தில் இருக்கைகளை மாற்றக் கோரி கனிமொழி எம்பி கடிதம் எழுதிய சில மணி நேரங்களிலேயே, களத்தில் இரு கட்சித் தொண்டர்களும் மோதிக் கொண்டது கூட்டணியின் விரிசல் எந்த அளவிற்கு ஆழமாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது. தமிழகம் முழுவதும் காங்கிரஸ் அலுவலகங்களுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
