“ஒட்டுமொத்த பெண்களையும் அவதிக்கும் திமுக கைக்கூலி... திமுக மண்ணைக் கவ்வுவது உறுதி!” - விஜய் கண்டனம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் தொண்டர்கள் குறித்து அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
தமிழகப் பெண்களைத் தரக்குறைவாகப் பேசிய பொன்ராஜை 'திமுகவின் கைக்கூலி' எனச் சாடியுள்ள விஜய், தனது பதிவில், "இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான வார்த்தைகளால், திமுகவின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் விமர்சித்துள்ளார். தவெக-வைச் சீண்டுவதாக நினைத்து, அவர் ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதித்துள்ளார். திமுக தலைமையின் அரவணைப்பில் செயல்படும் இத்தகைய நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்."

"பெண்களை அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் 'தீய சக்தி' திமுக மண்ணைக் கவ்வுவது உறுதி, உறுதி, உறுதி!" எனத் தனது அறிக்கையில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில், தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் தொண்டர்களைக் குறித்துப் பொன்ராஜ் பயன்படுத்திய வார்த்தைகள் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. ஏற்கனவே தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா இதற்குப் பகிரங்க மன்னிப்பு கோரியிருந்த நிலையில், தற்போது கட்சியின் தலைவரே நேரடியாகக் களமிறங்கிப் பதிலடி கொடுத்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், 'பெண்கள் பாதுகாப்பு மற்றும் கண்ணியம்' என்ற ஆயுதத்தை ஏந்தித் திமுகவிற்கு எதிராக விஜய் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளார். இது வரும் தேர்தலில் பெண் வாக்காளர்களின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
