திமுகவினர் அதிர்ச்சி... தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் மூளையில் ரத்த உறைதல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி!
திமுக தலைமை நிலையச் செயலாளரும், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சங்கத்தின் துணைத் தலைவருமான பூச்சி முருகன், மூளையில் ஏற்பட்ட திடீர் ரத்த உறைதல் பாதிப்பு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிரச் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் கொடைக்கானலுக்குச் சுற்றுலாச் சென்றிருந்த பூச்சி முருகனுக்கு, நேற்று முன்தினம் மதிய வேளையில் திடீரென மயக்கமும், உடல்நலக் குறைவும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு, மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதற்கட்டச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
மேல் சிகிச்சைக்காக, நேற்று காலை மதுரையிலிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, இங்குள்ள ஒரு தனியார் கார்டியோ-வாஸ்குலர் தீவிரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் ரத்த உறைதல் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகத் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூச்சி முருகன் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திமுகவின் முக்கிய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்களான நாசர், கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்தும், அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்து வருகின்றனர்.
