“திமுக அச்சுறுத்துகிறது... வாக்கு எண்ணிக்கை மையங்களில் 1 கி.மீ தூரத்திற்குத் தடை போடுங்க..” - ஆதவ் அர்ஜுனா பேட்டி!

 
ஆதவ் அர்ஜுனா ஆதவ் அர்ஜுனா

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், தவெக சார்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆதவ் அர்ஜுனா, ஆளுங்கட்சியான திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, "தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக-விற்கு நிலவும் அமோக வரவேற்பைக் கண்டு திமுக தோல்வி பயத்தில் உள்ளது. இதனால் எங்கள் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். குறிப்பாக வாக்கு எண்ணிக்கை நெருங்கும் வேளையில் இந்த மிரட்டல்கள் அதிகரித்துள்ளன" என்று சாடினார்.

ஆதவ் விஜய்

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்கத் தேர்தல் ஆணையத்திற்கு அவர் சில முக்கியக் கோரிக்கைகளை வைத்துள்ளார்: தமிழகம் முழுவதும் உள்ள 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில், தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மட்டுமே உள்ளே இருக்க வேண்டும். வேறு எந்தக் கட்சி நிர்வாகிகளையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களைச் சுற்றி 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்தக் கட்சியின் கொடிகளோ அல்லது நிர்வாகிகளோ இருக்கக் கூடாது. இந்தப் பகுதியை முழுமையாகக் காவல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.

ஆதவ் அர்ஜுனா

ஏற்கனவே தவெக தலைவர் விஜய் தனது வேட்பாளர்களிடம் "வெற்றி பெற்றவுடன் நேராகப் பனையூர் வாருங்கள்" என்று கூறியிருந்த நிலையில், தற்போது ஆதவ் அர்ஜுனா தேர்தல் ஆணையத்திடம் இத்தகைய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது, அக்கட்சியின் தேர்தல் கால விழிப்புணர்வைக் காட்டுகிறது. வாக்கு எண்ணிக்கையின் போது கடைசி நிமிடம் வரை தவெக முகவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.