"வழக்குகளில் இருந்து தப்பிக்கவே பாஜகவை நாடுகிறது திமுக" - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்!
சபாநாயகரின் தேநீர் விருந்தில் திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்றதன் மூலம், வழக்குகளில் இருந்து தப்பிக்கவே பாஜகவை திமுக நாடி வருகிறது என்பது நிரூபணமாகியுள்ளதாகச் சட்ட மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் பரஸ்பரம் ஆதரவாகப் பேசி வருவதாகச் சாடிய அமைச்சர், எடப்பாடி பழனிசாமி தனது பலத்தைக் காட்டுவதற்காகவே போராட்டங்களை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முறைகேடுகளைச் சுட்டிக்காட்டிய அவர், "கட்சி நிதியாகப் போக வேண்டியவை அனைத்தும் தற்போது அரசுக்கு வருவாயாக வந்து கொண்டிருக்கிறது. தவறு செய்தவர்கள் தற்காலிகமாகத் தப்பிக்கலாமே தவிர, வழக்குகளில் இருந்து தப்ப முடியாது; அனைத்துக்கும் போதிய ஆதாரங்கள் உள்ளன" எனக் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான கதவுகள் வெளிப்படையாகத் திறக்கப்பட்டுள்ளன என்றும், முதலீட்டாளர்களிடம் எந்தக் கட்சி நிதியும் பெறப்படவில்லை என்றும் விளக்கமளித்தார்.
மாநிலத்தில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்றும், வரியை முறைப்படுத்தும் பணிகளே நடைபெற்று வருகின்றன என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
கோவையில் தனியார் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகப் பேசிய அமைச்சர், இச்சம்பவத்திற்குக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நிலவிய "சீனியர் - ஜூனியர் தகராறே" முக்கியக் காரணம் என்று விளக்கமளித்தார்.
