"நாளை பாஜகவோடு திமுக கைகோர்க்கலாம்; ஆனால்..." - திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

 
திருமாவளவன்

திருச்சியில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திமுக மற்றும் பாஜக உடனான கூட்டணி அரசியல் குறித்துப் பேசிய கருத்துக்கள்  அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

கூட்டத்தில் தொண்டர்களிடையே பேசிய திருமாவளவன், "பாஜக  என்பது இமயமலை போன்ற மிக வலிமை வாய்ந்த ஒரு சித்தாந்த இயக்கம். அதனை ஒரு தனி நபர் அல்லது ஒரு சிறிய இயக்கம் தனித்து நின்று எதிர்த்தால், அவர்கள் அரசியல் வெளிச்சத்திற்கே வர முடியாது. அவ்வளவு பெரிய பலம் வாய்ந்த சித்தாந்தத்தை நாம் எதிர்கொண்டு வருகிறோம்" என்று குறிப்பிட்டார்.

ஸ்டாலின் திருமாவளவன்

தொடர்ந்து பேசிய அவர், திமுக  உடனான கூட்டணி மற்றும் நட்பு குறித்துத் தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார். "பாஜகவின் சித்தாந்தத்தை திமுக போன்ற பெரிய கட்சிகள் எதிர்க்கும் வரை, அவர்கள் நமக்குச் சிறந்த நட்பு சக்திகள் மட்டுமே. அவர்கள் நாளை ஒருவேளை பாஜகவோடு கைகோர்க்கலாம் அல்லது கடந்த காலங்களில் ஏற்கனவே கைகோர்த்தும் இருந்திருக்கலாம்; அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால், தற்போதைய சூழலில் அவர்கள் பாஜகவை எதிர்க்கும் வரை, திமுக நமக்கு நட்பு சக்தி தான்" என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

கூட்டணிக்குள் இருந்துகொண்டே, திமுக எதிர்காலத்தில் எடுக்கக்கூடிய அரசியல் முடிவுகள் குறித்துத் திருமாவளவன் பேசியுள்ள இந்த வெளிப்படையான பேச்சு, தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.