“திமுக சேற்றை வாரி இறைக்கத் தான் செய்யும்!” - முதல்வர் விஜய்!

 
விஜய் விஜய்

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக திமுக முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து முதலமைச்சர் விஜய் தனது 'எக்ஸ்' தளத்தில் ஒரு உருக்கமான மற்றும் ஆவேசமான பதிவைப் பகிர்ந்துள்ளார்.

திமுக-வின் விமர்சனங்களை 'ஆற்றாமை' என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் விஜய், "தேர்தல் தோல்வியில் மூழ்கித் திக்கித் திணறிக் கொண்டிருக்கும் திமுக, நம் மீது சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும். ஆனால், அதைப் பற்றி நாம் சிறிதும் கண்டு கொள்ளப் போவதில்லை" எனத் தெரிவித்துள்ளார். விமர்சனங்களுக்குப் பதில் சொல்லி நேரத்தை வீணாக்காமல், மக்கள் நலப்பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாக அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.

விஜய்

தனது ஆட்சியின் தத்துவார்த்த நிலைப்பாடு குறித்து, "மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் நாமும் நமது அரசும் எப்போதும் உறுதியாக இருக்கப் போகிறோம். இதைப் பார்த்து திமுக ஆற்றாமையில் அலறுவது உறுதி" என அவர் குறிப்பிட்டுள்ளார். இனிவரும் காலங்களில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மற்றும் சட்டங்களை இயற்றுவதிலேயே தனது அரசு முழு மூச்சாகச் செயல்படும் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார். 

விஜய்

சட்டமன்றத்தில் இன்று உதயநிதி ஸ்டாலின் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தவெக அரசு மீது 'குதிரை பேர' புகார்களை முன்வைத்த நிலையில், அதற்குப் பதில் அளிக்காமல் தனது கொள்கைப் பிடிப்பை மட்டும் விஜய் வெளிப்படுத்தியிருப்பது, அவர் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுக்க விரும்புவதைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.