கல்யாணக் கனவு கலைந்தது... புத்தாடை அணிந்து காதலன் தற்கொலை - ஹோட்டல் அறையில் விபரீதம்!

 
புதுமாப்பிள்ளை தற்கொலை புதுமாப்பிள்ளை தற்கொலை

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் குக்கட்பள்ளி பகுதியில், காதலியின் வீட்டார் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய காதலன், திருமணத்திற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த லோகேஷ் (24) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்குப் பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த காதலர்கள், வீட்டை விட்டு வெளியேறி ஹைதராபாத்தில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

பள்ளி மானவி தற்கொலை

திருமண ஏற்பாடுகளுக்காக ஹைதராபாத் குக்கட்பள்ளியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அறை எடுத்து இருவரும் தங்கியிருந்தனர். இன்று காலை திருமணத்திற்காக இருவரும் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது, காதலியை உணவகத்திற்குச் சென்று டிபன் வாங்கி வருமாறு லோகேஷ் அனுப்பி வைத்துள்ளார். காதலி வெளியே சென்ற அந்தச் சில நிமிடங்களில், லோகேஷ் தான் திருமணத்திற்காகப் புதிதாக வாங்கியிருந்த சட்டையை அணிந்துகொண்டு, அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை

உணவு வாங்கிவிட்டுத் திரும்பிய காதலி, கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்து ஹோட்டல் ஊழியர்களுக்குத் தகவல் அளித்தார். கதவை உடைத்துப் பார்த்தபோது லோகேஷ் சடலமாகக் கிடந்ததைக் கண்டு கதறித் துடித்தார்.  இது குறித்து தகவலறிந்து வந்த குக்கட்பள்ளி போலீஸார், லோகேஷின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். லோகேஷின் தற்கொலைக்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை. காதலியின் வீட்டார் தரப்பில் ஏதேனும் மிரட்டல் விடுக்கப்பட்டதா அல்லது எதிர்கால வாழ்க்கை குறித்த பயத்தால் இந்த முடிவை எடுத்தாரா என்பது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.