கை நழுவிப்போன முதல்வர் கனவு... எதிர்கட்சித் தலைவராகிறாரா உதயநிதி ஸ்டாலின்!

 
உதயநிதி உதயநிதி

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள சூழலில், அக்கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இத்தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் களம் இறங்கிய உதயநிதி ஸ்டாலின், தனது தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும், மாநிலம் முழுவதும் திமுக இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதால், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக யார் பொறுப்பேற்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

உதயநிதி

தற்போதைய தேர்தல் நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து முதலிடத்திலும், திமுக 73 இடங்களுடன் இரண்டாம் இடத்திலும், அதிமுக 53 இடங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. இதன்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் பட்சத்தில், சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக திமுக செயல்பட உள்ளது. திமுக சட்டமன்றத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உதயநிதி ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோர் இந்தத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளதால், கட்சியைச் சட்டமன்றத்தில் வழிநடத்தும் பொறுப்பு உதயநிதி ஸ்டாலினின் தோள்களில் விழக்கூடும் எனக் கருதப்படுகிறது. உதயநிதி எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றால், சட்டமன்றத்தில் விஜய் மற்றும் உதயநிதி இடையேயான அரசியல் விவாதங்கள் மிகுந்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்குப் பிறகு வெளியாகும் எனத் தெரிகிறது.