“டிரஸ் கிழிந்து ரத்தம் கொட்டியது...” ட்ரம்ப் மீது சுவிட்சர்லாந்தின் முன்னாள் அழகி பீட்ரைஸ் கியூல் பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சுவிட்சர்லாந்தின் முன்னாள் அழகியும் மாடல் அழகியுமான பீட்ரைஸ் கியூல் பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சியினர் வெளியிட்டுள்ள 53 பக்க அறிக்கையின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனக்கு 24 வயதாக இருந்தபோது (1993 நவம்பரில்), அட்லாண்டிக் சிட்டியில் உள்ள டிரம்பின் பிளாசா ஹோட்டலில் நடைபெற்ற அழகுப் போட்டி நிகழ்வின்போது டிரம்ப்பைச் சந்தித்ததாக கியூல் தெரிவித்துள்ளார்.

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் நேரம் செலவழித்த பிறகு, டிரம்பின் பிரதிநிதியின் அழைப்பின்பேரில் ஹோட்டலின் மேல்மாடி அறைக்குச் சென்றதாகவும், அங்கு டிரம்ப் தன்னை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதலின்போது தனது ஆடை கிழிந்ததாகவும், உடலின் பல பகுதிகளில் இரத்தக் கசிவும் காயங்களும் ஏற்பட்டதாகவும் கியூல் விவரித்துள்ளார். மேலும், விசா மற்றும் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெற்றுத் தருவதாக வாக்களித்து, இந்தச் சம்பவம் குறித்து யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று டிரம்ப் தன்னை மிரட்டியதாகவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகக் கட்சியினர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையை வெள்ளை மாளிகை முற்றிலுமாக மறுத்துள்ளது. அமெரிக்காவில் வரவிருக்கும் தேர்தல்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில், மனநிலை பிறழ்ந்த ஜனநாயகக் கட்சியினர் மேற்கொள்ளும் அவநம்பிக்கையான முயற்சி இதுவென்று வெள்ளை மாளிகைத் செய்தித் தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும் டொனால்ட் டிரம்புக்கும் இடையேயான பழைய தொடர்புகள் குறித்து இந்த விசாரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. டிரம்புக்கும் எப்ஸ்டீனுக்கும் உள்ள தொடர்புகளை விசாரிக்கச் சுதந்திரமான சிறப்பு வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் ஜனநாயகக் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
