10 கி.மீ தூரத்திற்கு அதிர்ந்த பூமி.. சிவகாசியை உலுக்கிய வெடிச்சத்தம்... விருதுநகர் வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் இன்று மாலை நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்து, தற்போது ஒரு பெரும் துயரமாக மாறியுள்ளது. மீட்புப் பணிகள் தொடரத் தொடர பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான 'வனஜா' பட்டாசு ஆலையில் இன்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில், முதலில் 14 பேர் பலியானதாகத் தகவல் வெளியானது. அதன் பின்னர் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்த நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தின் தீவிரம் குறித்துப் அப்பகுதி மக்கள் கூறுகையில், "பட்டாசுகள் வெடித்த சத்தம் இடி விழுந்தது போலப் பயங்கரமாக இருந்தது. வெடி மருந்து வெடித்த வேகத்தில் ஆலை இருந்த இடமே தரைமட்டமானது. சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்குப் பூமியில் அதிர்வு உணரப்பட்டது."
விபத்தின் கோரத்தினால் ஆலையிலிருந்த 4 அறைகள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளுக்குள் இன்னும் தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் சிவகாசி, சாத்தூர் மற்றும் விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா, மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுச் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார். முதற்கட்ட விசாரணையில், பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட 'மருந்து உராய்வு' காரணமாகவே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. இந்த ஆலை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ஆலை முறையான பாதுகாப்பு விதிகளுடன் இயங்கியதா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
