“பொருளாதாரத் தடை... அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணிய மாட்டோம்... சரணடையச் சொல்லும் பேச்சுவார்த்தை எங்களுக்குத் தேவையில்லை!” - ஈரான் உறுதி!

 
ஈரான் அமெரிக்கா ஈரான் அமெரிக்கா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்தி வரும் சூழலில், “நிபந்தனைகளுக்குப் பணிய மாட்டோம்; தேவைப்பட்டால் புதிய அஸ்திரங்களுடன் போருக்குத் தயாராக இருப்போம்” என ஈரான் அதிரடியாக எச்சரித்துள்ளது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெறவிருந்த இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என ஈரான் இன்று அறிவித்துள்ளது. கடந்த வார இறுதியில் ஈரானின் சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கக் கடற்படை சிறைபிடித்ததுதான் இந்தப் புதிய மோதலுக்கு உடனடி காரணமாகியுள்ளது. இது ஒரு ‘ஆக்கிரமிப்புச் செயல்’ என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

ஈரான் அணு

“ஈரான் அமைதிக்கு இணங்கவில்லை என்றால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது ‘ஏராளமான குண்டுகள்’ வீசப்படும்” என டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் எச்சரித்திருந்தார். ஈரானின் நாடாளுமன்றச் சபாநாயகரும் முக்கியத் தூதுவருமான முகமது பாகர் கலிபாஃப் இது குறித்துத் தெரிவிக்கையில், “அமெரிக்கா உண்மையில் அமைதிப் பேச்சுவார்த்தையை விரும்பவில்லை. எங்களை நிபந்தனையின்றிச் சரணடைய வைக்கவே இத்தகைய பொருளாதாரத் தடைகளையும் ராணுவ மிரட்டல்களையும் விடுக்கிறது.”

அமெரிக்கா ஈரான்

“பயமுறுத்தி எங்களை மேசைக்கு அழைக்க முடியாது. போர்க்களத்தில் புதிய வியூகங்களுடன் பதிலடி கொடுக்க ஈரான் தயாராக உள்ளது.” நாளை ஏப்ரல் 22ம் தேதி நள்ளிரவுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிகப் போர் நிறுத்தம் முடிவுக்கு வருகிறது. இதனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் போக்குவரத்து மீண்டும் துண்டிக்கப்படலாம் என்பதால் உலக நாடுகள் பெரும் கவலையடைந்துள்ளன.