அண்ணன் சீர் கொடுத்த தவெக பிரமுகர்.. கோவையில் 126 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா!
முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 126 கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிரம்மாண்டமான முறையில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது.
கோவை சூலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இருகூர் தவெக நகரச் செயலாளர் இ.க. மணிகண்டன் தலைமையில் இந்தச் சிறப்பு நற்பணித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் கலந்துகொண்ட 126 கர்ப்பிணிப் பெண்களுக்கும், முதலமைச்சர் விஜய்யின் சார்பில் 'அண்ணன் சீர்' வழங்கும் விதமாகப் பாரம்பரிய முறைப்படி தாய் வீட்டுச் சீதனப் பொருட்கள், புத்தாடைகள், வளையல்கள் மற்றும் மங்களப் பொருட்கள் அடங்கிய தட்டுகள் வைக்கப்பட்டன.
பாரம்பரிய முறைப்படி மங்கள இசை முழங்க, முதியவர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் முன்னிலையில் கர்ப்பிணிகளுக்குச் சந்தனம், குங்குமம் இட்டு, வளையல்கள் அணிவித்து வளைகாப்பு நிகழ்ச்சி மிக விமரிசையாக நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தவெக சார்பில் அண்ணன் சீராக வழங்கப்பட்டன. கர்ப்பிணிப் பெண்களின் குடும்பத்தினர் உட்படப் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி சூலூர் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
