தேர்தல் வழக்கு... அமைச்சர் செங்கோட்டையன் 4 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

 
செங்கோட்டையன்

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட மூத்த அரசியல்வாதியான கே.ஏ.செங்கோட்டையன் வெற்றி பெற்று, தற்போதைய தவெக அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

செங்கோட்டையன்

அவரது இந்த வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வி.பி.பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். வேட்புமனுத் தாக்கலின் போதே செங்கோட்டையனின் சொத்து விவரங்கள் மற்றும் ஆவணப் பிரமாணப் பத்திரங்களில் குளறுபடிகள் இருப்பதாக அதிமுக தரப்பில் ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தல் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று  விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தத் தேர்தல் புகார் குறித்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்னும் நான்கு வார காலத்திற்குள் உரியப் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, அவருக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணையிட்டனர்.

மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தவெக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், மூத்த அமைச்சர் செங்கோட்டையனுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.