எருமையைக் கண்டு மிரண்டு ஓடிய யானை! மூணாறில் அரங்கேறிய வினோதம்!

 
யானை யானை

காட்டு யானைகள், சாதாரண எருமை மாடுகளைக் கண்டு மிரண்டு ஓடிய வினோத சம்பவம் கேரள மாநிலம் மூணாறு அருகே நிகழ்ந்துள்ளது. இந்தச் சுவாரஸ்யமான காட்சி அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே உள்ள மாங்குளம் பகுதியில் 'ஆனைகுளம்' என்ற ஆறு உள்ளது. பெயருக்கேற்றார் போல, இந்தக் காட்டுப் பகுதியில் உள்ள யானைகள் கூட்டம் கூட்டமாகத் தாகம் தீர்க்க இந்த ஆற்றுக்கு வருவது வழக்கம். தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால், ஆற்றில் நீர்வரத்து குறைந்து ஆங்காங்கே குட்டைகள் போலத் தண்ணீர் தேங்கியுள்ளது.

யானை காட்டுயானை

நேற்று மாலை, ஒரு தாய் யானை தனது குட்டியுடன் தாகம் தணிக்க மெல்ல மெல்ல ஆற்றங்கரைக்கு வந்தது. அப்போது, அந்தப் பகுதியில் உள்ள ஒரு விவசாயிக்குச் சொந்தமான இரண்டு எருமை மாடுகள் அங்கு மேய்ந்து கொண்டிருந்தன. தாகத்தில் வந்த யானைகள், எருமை மாடுகளைப் பார்த்தவுடன் அப்படியே ஸ்தம்பித்து நின்றன.

பொதுவாக மற்ற விலங்குகளைக் கண்டு அஞ்சாத யானைகள், இந்த எருமை மாடுகளைப் பார்த்ததும் தண்ணீர் குடிக்காமலேயே பயத்தில் பிளிறியபடி அங்கிருந்து ‘திபுதிபு’ என ஓட்டம் பிடித்தன.

யானை

யானைகள் எருமை மாடுகளைக் கண்டு விலகிச் செல்வதற்குப் பின்னால் ஒரு முக்கியக் காரணம் இருப்பதாகக் காட்டியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்: எருமை மாடுகளின் கொம்புகள் மிகவும் கூர்மையானவை. அவை தாக்க முற்பட்டால் யானைகளின் தும்பிக்கை அல்லது கால்களில் பலத்த காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எருமை மாடுகள் பயப்படாமல் எதிர்த்துத் தாக்கும் குணம் கொண்டவை என்பதால், தேவையற்ற மோதலைத் தவிர்க்க யானைகள் பெரும்பாலும் அவற்றைச் சந்திப்பதைத் தவிர்க்கும். ஆற்றங்கரைக்குத் தாகத்துடன் வந்த யானைகள், எருமைகளுக்குப் பயந்து தண்ணீர் குடிக்காமலேயே காட்டுக்குள் ஓடி மறைந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பேச்சாக உள்ளது.