"வாக்கு எண்ணும் மையத்தில் ‘ஜனநாயகன்’ படம் பார்த்த ஊழியர்... அண்ணா பல்கலைக்கழகத்தில் பரபரப்பு!

 
ஜனநாயகன் ஜனநாயகன்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பில் நிகழ்ந்த இந்தச் சிறு அலட்சியம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பதிவான வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் கணினி பராமரிப்புப் பணிக்காக யுவராஜ் என்ற ஒப்பந்த ஊழியர் பணியமர்த்தப்பட்டிருந்தார்.

ஜனநாயகன்

அதிமுக்கியமான அந்தப் பாதுகாப்பு அறையில் இருந்த திரையில், யுவராஜ் சட்டவிரோதமாக 'ஜனநாயகன்' என்ற திரைப்படத்தைப் பார்த்துள்ளார். தனது செயலை ரகசியமாகச் செய்யாமல், கட்டுப்பாட்டு அறையில் படம் ஓடுவதை ஒரு புகைப்படமாக எடுத்து, "வாக்கு எண்ணும் மையத்தில் படம் பார்க்கிறேன்" என்ற ரீதியில் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மிக உயரிய பாதுகாப்பு மண்டலமான அந்தப் பகுதியில் எவ்வித மின்னணு உபகரணங்களையும் தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற விதியை மீறியதற்காக யுவராஜ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

மதுரையில் பரபரப்பு! வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள்!!

பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக அவர் தனது பணியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், இத்தகைய செயல்கள் தேர்தல் பாதுகாப்பின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தைச் சுற்றித் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் மத்தியப் பாதுகாப்புப் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.