உள்ளே எதிரி... நாடாளுமன்றத்திற்கு வெளியே நட்பு பாராட்டிய கனிமொழி - ஜோதிமணி!

 
கனிமொழி ஜோதிமணி

புதுடெல்லியில் தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், அரசியலுக்கு அப்பாற்பட்டு திமுக மற்றும் காங்கிரஸ் பெண் எம்பிக்கள் கலகலப்பாகப் பேசி நட்பு பாராட்டிய நிகழ்வு எம்பிக்கள் மத்தியிலும் ஊடகங்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்ததைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணியில் இருந்து திமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.

கூட்டணி உடைந்த சூழலில், நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்களை மாற்றித் தருமாறு திமுக எம்பி கனிமொழி கோரிக்கை வைத்தார். அதன்படி, நாடாளுமன்றத்திற்குள் காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையிலான இருக்கை அமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டன.

நாடாளுமன்றத்திற்குள் அரசியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் எதிரெதிர் துருவங்களாகச் செயல்பட வேண்டிய சூழல் உருவாகியிருந்தாலும், நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே இரு கட்சி பெண் எம்பிக்களும் தங்களின் பழைய நட்பை மறக்கவில்லை.

திமுக எம்பி கனிமொழியும், காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும் நாடாளுமன்றத்திற்கு வெளியே சந்தித்து மிகவும் கலகலப்பாகவும் நட்போடும் உரையாடிக் கொண்டிருந்தனர். அவைக்குள் கடுமையான அரசியல் எதிரிகளாக மோதிக் கொள்ளும் சூழல் நிலவினாலும், அவைக்கு வெளியே இரு பெண் எம்பிக்களும் காட்டிய இந்த நாகரிகமான நட்புறவு அங்கிருந்த ஏனைய உறுப்பினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.