தேர்தல் வழக்குகள் இறுதி செய்யப்படும் வரை வாக்குப்பதிவு எந்திரங்கள் காப்பறையில் பூட்டி வைக்கப்படும் - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்பொழுது முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் பலத்த பாதுகாப்புடன் கூடிய காப்பறைகளில் மிகவும் பத்திரமாகப் பூட்டி வைக்கப்படும் எனத் தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதிமுறைகளின்படி, தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், பிரதிநிதிகள் ஆகியோரின் நேரடி முன்னிலையிலேயே விவிபேட் எந்திரங்களில் இருந்து பெறப்பட்ட வாக்குச் சீட்டுகள் அனைத்தும் தடிமனான கருப்பு நிற உறைகளில் இட்டுச் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறைகள் அனைத்தும் எவ்விதத் தவறும் இன்றித் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாகப் பல்வேறு கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள தேர்தல் புகார் மனுக்கள் மற்றும் வழக்குகள் அனைத்தும் சட்டப்பூர்வமாக முழுமையாக விசாரித்து இறுதி செய்யப்படம் வரை இந்த எந்திரங்கள் அனைத்தும் திறக்கப்பட மாட்டாது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மிகக் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளின்படி, ஆயுதம் தாங்கிய போலிஸாரின் 24 மணி நேரக் கண்காணிப்பில் இந்த எந்திரங்கள் தொடர்ந்து காப்பறையிலேயே பாதுகாப்பாக இருக்கும் என அர்ச்சனா பட்நாயக் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
