மகிழ்ச்சியில் விவசாயிகள்... வெங்காயம் கொள்முதல் விலை 24% அதிரடி உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு!

 
வெங்காயம் வெங்காயம்

தேசிய அளவில் விவசாயிகளை ஊக்குவிக்கவும், வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலையைக் கட்டுக்குள் வைத்து மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதன்படி, அவசரக்கால இருப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நேரடியாகப் பெறப்படும் வெங்காயத்தின் கொள்முதல் விலை 24 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விவசாயிகளுக்குச் சாதகமாக வெங்காயத்தின் கொள்முதல் விலையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

வெங்காயம்

கடந்த மே மாதம் 15-ம் தேதி தொடங்கிய வெங்காயக் கொள்முதல் பணிகளுக்கு, இந்த புதிய விலை திருத்தம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கொள்முதல் விலையை 24 சதவீதம் உயர்த்தி, ஒரு கிலோ வெங்காயத்திற்கு ரூ.15.80 என மத்திய அரசு புதிய விலையை நிர்ணயம் செய்துள்ளது. சந்தையில் திடீரென ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்களை ஒழுங்குபடுத்தவும், தங்களது விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகளுக்கு உரிய லாபத்தை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெங்காயம்

வெங்காய விலை உயர்வு மட்டுமின்றி, நாட்டின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு குறித்தும் மத்திய அரசு ஒரு முக்கியச் சாதனைப் புள்ளிவிவரத்தைப் பகிர்ந்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது உள்நாட்டுப் பருப்பு உற்பத்தி மிகவும் வலுவான மற்றும் சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நாட்டின் அவசரக்கால தேவைகளுக்கான பருப்பு வகைகளின் ஒட்டுமொத்த கையிருப்பு தற்பொழுது 43 லட்சம் டன்களாக பல மடங்கு உயர்ந்துள்ளது என மத்திய அரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.