வைரலாகும் பேஷன் புரட்சி.. வேட்டி கட்டத் தெரியாதோருக்கு இனி கவலையில்லை!

 
வேட்டி பேஷன் வேட்டி பேஷன்

தென்னிந்திய ஆண்களின் ஆகச்சிறந்த பாரம்பரிய அடையாளமாக விளங்கும் முண்டு (வேட்டி) அணிவதில் தற்போதைய இளம் தலைமுறையினருக்கு இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், கேரள ஆடைக் கலை உலகினர் ஒரு அசத்தலான புதிய ஆடை வடிவத்தை அறிமுகம் செய்து இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர். பாரம்பரியத் தன்மையும் நவீன எளிமையும் இணையும் வகையில் இந்த ஆடை பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாரம்பரியமான குர்தா மற்றும் முண்டு எனப்படும் வேட்டி ஆகிய இரண்டையும் தனித்தனியாக அணிய வேண்டிய அவசியமில்லாமல், அவை இரண்டையும் அழகாக ஒருங்கிணைத்து ஒரே ஆடாவாகத் தைக்கப்பட்டு இந்த புதிய ஃபேஷன் ஆடை தற்போது சந்தைக்கு வந்துள்ளது.

பொதுவாக இன்றைய இளம்பசங்களுக்கு வேட்டியைச் சரியாக மடித்துக் கட்டத் தெரியாததும், அது அவிழ்ந்து விழுந்துவிடுமோ என்ற அச்சமும் பெரிய குறையாக உள்ளது. ஆனால், இந்த ஆடையை சாதாரண பேண்ட் அல்லது சுடிதார் அணிவதைப் போல மிக எளிதாக நொடியில் உடுத்திவிடலாம் என்பதால், வேட்டி கட்டத் தெரியாத ஆண்களும் இனி கம்பீரமாகப் பாரம்பரிய விழாக்களில் வலம் வர முடியும். நவீன காலத் தேவைகளுக்கு ஏற்ப இந்த ஆடையில் பல்வேறு கூடுதல் வசதிகளும் புகுத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய வகை ஆடைகள் அனைத்தும் 100% பிரீமியம் காட்டன் துணிகளால் நெய்யப்பட்டு, கண்ணைக் கவரும் உயர்தர டிஜிட்டல் பிரிண்டுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆண்கள் தங்களது செல்போன் மற்றும் பணப்பைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு வசதியாக, இதில் ஒரு ரகசிய பாக்கெட் வசதியும் தையல் அமைப்பிலேயே நுணுக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து உடல்வாகு கொண்ட ஆண்களுக்கும் பொருந்தும் வகையில் இந்த ஆடைகள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆண்களின் வெவ்வேறு உயரங்கள் மற்றும் உடல் அமைப்பிற்கு ஏற்ப, இந்த ஆடை தற்பொழுது நான்கு முக்கிய அளவுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. கேரளாவின் பாரம்பரிய ஓணம் மற்றும் பிற விழாக்காலங்களை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த ஆடை, தற்பொழுது கேரளா மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில இணையவாசிகளின் மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.