அக்னியே தொடங்கல ... தமிழகம் முழுவதும் 15 இடங்களில் சதம் அடித்த வெயில்... வேலூரில் உச்சகட்ட வெப்பம்!
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து மக்களை நிலைகுலையச் செய்து வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் மாநிலத்தின் 15 முக்கிய இடங்களில் வெப்பநிலையானது 100 டிகிரி ஃபெரன்ஹீட் அளவை கடந்து பதிவாகியுள்ளது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 106 டிகிரி வெயில் பதிவாகி பொதுமக்களை வாட்டி வதைத்துள்ளது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி மதிய நேரங்களில் முக்கிய நகரங்கள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

ஈரோடு, கரூர் மற்றும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் வெப்பத்தின் தாக்கம் தணியாமல் 100 டிகிரிக்கும் மேல் பதிவாகி அனல் காற்றை வீசச் செய்துள்ளது. திருச்சி, திருப்பத்தூர் மற்றும் தருமபுரி போன்ற இடங்களிலும் வெப்பம் 100 டிகிரியை கடந்து பதிவானதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே சூரியன் தனது விஸ்வரூபத்தை காட்டத் தொடங்கியுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்க பொதுமக்கள் அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குடை பிடித்தபடியும் முகத்தை துணியால் மூடியபடியும் வெளியே செல்வதை காண முடிகிறது. இளநீர், தர்பூசணி மற்றும் பழச்சாறு கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு இன்னும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
