என்ஜினீயரிங் முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு - 146 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை!

 
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு! செப்டம்பர் 14ல் தரவரிசைப் பட்டியல்!

தமிழ்நாட்டில் 2026-2027-ஆம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கைக்கான முதல் சுற்று ஆன்லைன் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தம் 26,851 இடங்கள் நிரம்பியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதல் சுற்று முடிவில் பொதுப்பிரிவில் 24,674 இடங்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% சிறப்பு ஒதுக்கீட்டில் 2,177 இடங்களும் என மொத்தம் 26,851 இடங்கள் நிரம்பியுள்ளன. பொதுப்பிரிவில் மொத்தம் உள்ள 1,81,434 இடங்களில் 13.6% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதன் மூலம் தற்போது 1,56,760 இடங்கள் காலியாக இருக்கின்றன. கலந்தாய்வில் பங்கேற்ற 422 கல்லூரிகளில், 146 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.

கலந்தாய்வு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பிரிவில் கிண்டி பொறியியல் கல்லூரியிலும் (1,138 இடங்கள்), சுயநிதி பிரிவில் கோவை கிருஷ்ணா கல்லூரியிலும் (1,638 இடங்கள்) அதிகபட்சமாக இடங்கள் நிரம்பியுள்ளன. 200-க்கு 200 கட்-ஆப் எடுத்த 52 மாணவர்களில் 38 பேரும், 195-க்கு மேல் எடுத்த 2,151 பேரில் 1,506 பேரும் தங்களுக்கான இடங்களை உறுதி செய்துள்ளனர்.

மாணவர்கள் வழக்கம்போல கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் போன்ற படிப்புகளுக்கே அதிக முன்னுரிமை அளித்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்ந்த பாடப்பிரிவுகளில் கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 1,81,436 இடங்களாக உயர்த்தப்பட்டுள்ளன.

கலந்தாய்வு

பொதுப்பிரிவில் தரவரிசை 37,977 முதல் 1,31,093 வரை உள்ள மாணவர்களுக்கான 2-வது சுற்று கலந்தாய்வு தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் விருப்ப இடங்களைத் தேர்வு செய்ய ஆகஸ்ட் 5ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்கான இடஒதுக்கீடு நடைமுறைகள் ஆகஸ்ட் 17 வரை நடைபெறவுள்ளன.