அப்பளம் போல் நொறுங்கிய முன்பகுதி... லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து - 20 பேர் படுகாயம்!
கோயம்புத்தூரிலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து, கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து ஓட்டுநர் இடிபாடுகளுக்குள் சிக்கிப் பலத்த காயமடைந்தார்.
கோயம்புத்தூரிலிருந்து நேற்று இரவு பயணிகளுடன் நாகர்கோவில் நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது. இன்று அதிகாலை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வந்துகொண்டிருந்தது. அப்போது, சாலையோரம் நின்றுகொண்டிருந்த சிமெண்ட் கலவை ஏற்றிய டேங்கர் லாரி மீது எதிர்பாராத விதமாகப் பேருந்து அதிவேகமாக மோதியது. இந்த மோதலின் தாக்கத்தில் ஆம்னி பேருந்தின் முகப்புப் பகுதி அடையாளம் தெரியாத அளவுக்கு அப்பளம் போல் நொறுங்கியது. பேருந்து ஓட்டுநர் சரவணன், 8 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட மொத்தம் 20 பேர் காயமடைந்தனர்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்த கோவில்பட்டி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த ஓட்டுநர் சரவணனை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர். காயமடைந்த அனைவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலத்த காயமடைந்த 3 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தால் திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீர் செய்தனர். மேலும், லாரி டிரைவரின் கவனக்குறைவா அல்லது பேருந்து ஓட்டுநரின் தூக்கக் கலக்கமா என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
