இன்று மைசூரில் இறுதிச்சடங்கு... பாடகி எஸ். ஜானகி உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் - கர்நாடகா அரசு அறிவிப்பு!

 
ஜானகி

இந்தியத் திரையிசையின் முடிசூடா ராணியாகவும், 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' என்றும் அன்போடு அழைக்கப்பட்ட பழம்பெரும் பாடகி எஸ். ஜானகி அம்மா (88) மைசூருவில் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும், கோடிக்கணக்கான இசை ரசிகர்களையும் ஆரா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுமார் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை படைத்த ஜானகி அம்மா, 2016-ஆம் ஆண்டிற்குப் பிறகு திரைத்துறையில் இருந்து முழுமையாக விலகி, கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள தனது மகன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

ஜானகி

கடந்த ஜனவரி மாதம் அவரது ஒரே மகனான முரளி கிருஷ்ணா உடல்நலக்குறைவால் திடீரென மரணமடைந்தார். ஒரே மகனின் மறைவு ஜானகி அம்மாவை மன ரீதியாகப் பெருமளவில் பாதித்தது. அந்தத் துயரத்தோடு சேர்ந்து வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவும் அவரைத் தொற்றிக் கொண்டது.

இந்நிலையில், நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, மைசூருவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது.

ஜானகி அம்மாவின் உடலுக்குத் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காகப் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் இன்று காலை முதல் ஜானகி அம்மாவின் உடல் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

 இந்திய இசைத் துறைக்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பைப் போற்றும் விதமாக, ஜானகி அம்மாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் எனப் பெங்களூரில் கர்நாடக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜானகி

மகாராஜா கல்லூரி மைதானத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நிறைவடைந்ததும், இன்று பிற்பகல் 3:00 மணி அளவில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்குகிறது. அங்கிருந்து உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, கனியனகுந்தி என்ற இடத்தில் இறுதிச்சடங்குகள் முறைப்படி நடத்தப்பட்டு, காவல்துறையின் அரசு மரியாதையுடன் ஜானகி அம்மாவின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அவரது மருமகள் உமா, பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல தலைமுறைகளைக் கடந்தும் தனது காந்தக் குரலால் உலகத்தையே கட்டிப்போட்ட ஒரு மாபெரும் இசைப் பொக்கிஷத்தின் மறைவு, இந்திய இசை வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகிறது.