"ஏழை மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும்!" - நயினார் நாகேந்திரன்

 
நயினார் நாகேந்திரன்

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை எவ்விதத் தாமதமும் இன்றி உடனடியாக நிரப்ப வேண்டும் எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகள் போதிய அடிப்படை வசதிகள் இன்றித் தவித்து வருகின்றன. இத்தகைய சூழலில், பல பள்ளிகளில் பல ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே நீடித்து வருவது ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கிவிடும்.

பள்ளிகளில் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாததால்,  பணியாற்றி வரும் எஞ்சிய ஆசிரியர்களுக்குக் கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. இது அவர்களது மனநலத்தையும், மாணவர்களுக்குக் கற்பிக்கும் கல்வியின் தரத்தையும்  பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"தமிழக அரசு கல்வித் துறைக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறுவது வெறும் விளம்பரமாக மட்டுமே இருக்கக் கூடாது. கள யதார்த்தத்தை உணர்ந்து, காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் தகுதி வாய்ந்த தேர்வர்களைக் கொண்டு உடனடியாக நிரப்பத் தேவையான அவசர நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்."