பக்காவாக ப்ளாண் போட்டு குடும்பமாக திருடிய கும்பல்.. கையும் களவுமாக கைது செய்த போலீசார்..!

 
குடும்பமாக திருடும் கும்பல்
கோடை காலத்தில் திறந்து இருந்த வீடுகளில் குடும்பமாக சேர்ந்து கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் சிலைமான் , கருப்பாயூரணி திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2021ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 3 ஆண்டுகளாக கோடை காலங்களில் திறந்து இருக்கக்கூடிய வீடுகளை குறிவைத்து வீடுகளில் உள்ள நபர்களை மிரட்டி தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிப்பதோடு, பீரோவில் இருக்கும் நகைகளையும் கொள்ளையடித்து செல்வதாக 20க்கும் மேற்பட்ட புகார்கள் சிலைமான் மற்றும் கருப்பாயூரணி காவல்நிலையத்திற்கு வந்துள்ளது.இதையடுத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாந்த் தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஊமச்சிகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன், சிலைமான் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், குமரகுரு உள்ளிட்டோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார் கொள்ளை நடந்த வீடுகளை சுற்றி அனைத்து பகுதிகளிலும் நேரில் சென்று, கொள்ளையர்களை பற்றி மறைமுகமாக விசாரித்தனர். கொள்ளை கும்பல் குறித்து ஏதாவது துப்புக் கிடைத்துவிடாதா என்று தேடிய டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையிலான போலீஸாருக்கு ஒரு விஷயம் பொறி தட்டியது. கொள்ளை நடந்த இடத்தில் ஒரு வயதான பெண் வந்ததும், அவர்களுடன் 3 இளைஞர்கள் அப்பாவி போல் சுற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து அந்த கும்பல் புதன்கிழமை அன்று கல்மேடு பகுதி வழியாக பயணித்ததும், மீண்டும் கொள்ளையில் ஈடுபட போவதும் போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து கல்மேடுபகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தார்கள். சோதனையில் இரு இளைஞர்கள் வாகனத்தில் ஆயுதங்கள் மற்றும் கையுறை ஆகியவற்றை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அந்த இளைஞர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொள்ளை கும்பல் இவர்கள் தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஒருவர் மதுரை மாவட்டம் இளமானூர்புதுரைச் சேர்ந்த சின்னச்சாமி (25) என்ற நரி என்பதும், மற்றொருவர் அவரது சகோதரர் சேனைச்சாமி (23) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் அண்ணன் பெரிய கருப்பசாமி (27), பெரியம்மா ஆசை பொண்ணு (65) ஆகியோர் குடும்பமாக சேர்ந்து கடந்த 3 வருடங்களாக பூட்டிய வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சோனைச்சாமி(23), இவர்களது பெரியம்மா ஆசைபொண்ணு (65), இவரது மகன் பெரிய கருப்பசாமி (27) ஆகியோர் என தெரியவந்தது.

நான்கு பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களுடைய வீடுகளுக்கு சென்று நகைளை பறிமுதல் செய்ய முயன்றனர். ஆனால் நகைகள் இல்லை. போலீஸார் அதிரடியாக விசாரித்த பின்னர், நகைகளை வீட்டை சுற்றி புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை மண்வெட்டியால் வெட்டி எடுத்து 180 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் 9 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். மொத்தம் 240 சவரன் நகைகளை அந்த கும்பல் கொள்ளையடித்ததும், கொள்ளையடித்த பணம், நகைகளை பயன்படுத்தி வீடு மற்றும் வாகனங்கள் வாங்கியதும் தெரியவந்துள்ளது. அவர்களின் வீடு மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

From around the web