வணிக சிலிண்டர்கள் மீதான கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம் - மத்திய அரசு அறிவிப்பு!
ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு கேஸ் சிலிண்டர்கள் விநியோகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு முழுமையாக நீக்கியுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மேற்கு ஆசியாவில் நிலவி வந்த போர்ச் சூழல் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு நிலவியது. இதனால் சிலிண்டர் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே முதற்கட்ட போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாகவே மத்திய அரசு தற்போது கட்டுப்பாடுகளைத் தளர்த்த முன்வந்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தொழில் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான எல்.பி.ஜி. விநியோகத்தின் மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளும் உடனடியாக நீக்கப்படுகின்றன. மேற்கு ஆசிய நெருக்கடிக்கு முன்பாக சந்தையில் என்ன நடைமுறை இருந்ததோ, அதே நிலைக்கு விநியோகம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது."
நெருக்கடியின் தொடக்கத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொத்த எல்பிஜி விநியோகம், தற்போது நெருக்கடிக்கு முந்தைய நுகர்வு அளவுகளில் 50% அளவுக்குத் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வர்த்தகர்கள் மற்றும் தொழில் நுகர்வோருக்குப் பெரும் பயனை அளிக்கும்.
முன்னதாக, மேற்கு ஆசிய நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது நாட்டின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியை அதிகரிப்பதற்கும், தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்கும் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் சிறப்பு உத்தரவுகளைப் பிறப்பித்து மத்திய அரசு விநியோகத்தைக் கட்டுப்படுத்தியிருந்தது. உலகளாவிய சூழல் சுமுகமாக மாறியுள்ளதால், வர்த்தக சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு உணவக உரிமையாளர்கள் மற்றும் சிறு குறு தொழில்துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
