டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு 15 நாட்கள் கெடு; முன்கூட்டியே முடக்கத் தவறினால் கடும் நடவடிக்கை!

 
டெலிகிராம்

இந்தியாவில் டெலிகிராம் செயலி வழியாகத் திருட்டுத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் மற்றும் ஓடிடி உள்ளடக்கங்கள் சட்டவிரோதமாகப் பரப்பப்படுவதைத் தடுக்க, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அந்த நிறுவனத்திற்கு 15 நாட்கள் இறுதிக் கெடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெலிகிராம் தளத்தில் பரவி வரும் பைரசி உள்ளடக்கங்களுக்கு எதிராக உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் படைப்புத் துறை, சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஓடிடி தளங்களின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். இந்தச் சட்டவிரோதச் செயல்களைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை அடுத்த 15 நாட்களுக்குள் மத்திய அரசிடம் டெலிகிராம் நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்.

இதுவரை, இந்திய அரசு அல்லது தயாரிப்பாளர்கள் புகார் அளிக்கும் குறிப்பிட்ட சேனல்களை மட்டும் நீக்கும் வழக்கமான முறையை டெலிகிராம் பின்பற்றி வந்தது. ஆனால், இனிமேல் அரசாங்கம் வந்து சொல்லும் வரை காத்திருக்காமல், டெலிகிராம் நிறுவனம் தங்களது பிரத்யேகத் தொழில்நுட்பக் கருவிகள் மூலம் திருட்டுப் படங்களை முன்கூட்டியே கண்டறிந்து தானாகவே முடக்க வேண்டும்.

முடங்கிய வாட்ஸ் அப்! தட்டி தூக்கிய டெலிகிராம்!

அவ்வாறு செய்யத் தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் சமூக ஊடகங்களுக்கு வழங்கப்படும் 'பாதுகாப்புச் சலுகைகளை' டெலிகிராம் நிறுவனம் இழக்க நேரிடும். அதாவது, பயனர் செய்யும் குற்றத்திற்கு டெலிகிராம் நிறுவனமே சட்டப்படி பொறுப்பேற்க வேண்டியிருக்கும். இந்தியாவில் பதிப்புரிமை மீறல் என்பது வெறும் சிவில் குற்றம் மட்டுமல்ல, அது 1957-ஆம் ஆண்டின் பதிப்புரிமைச் சட்டம் மற்றும் 1952-ஆம் ஆண்டின் சினிமாட்டோகிராப் சட்டத்தின்படி கடுமையான கிரிமினல் குற்றமாகும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இதற்கு முன்னதாக, திருட்டு உள்ளடக்கங்களைக் கொண்டிருந்த 3,000-க்கும் மேற்பட்ட டெலிகிராம் சேனல்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.

மேலும், கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் மத்திய அரசு ஒரு வார காலத் தடையை விதித்திருந்தது. இருப்பினும், அந்தத் தடை காலம் காலாவதியான பிறகு, மீண்டும் இந்தியாவில் டெலிகிராம் செயலி செயல்பாட்டுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விதிக்கப்பட்டுள்ள 15 நாள் கெடுவுக்குள் டெலிகிராம் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்தியாவில் மீண்டும் அந்தச் செயலிக்குத் தடை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.