சட்டப்பேரவையில் 39 நிமிடங்கள் நீடித்த ஆளுநர் உரை - கொள்கை உரையை முழுமையாக வாசித்தார்!

 
ஆளுநர்: ஆளுநர்:

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கிய தமிழக சட்டமன்றத்தின் 17-வது கூட்டத்தொடர், புதிய தவெக அரசின் எதிர்காலத் திட்டங்களை விவரிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது. இக்கூட்டத்தொடரின் தொடக்க நிகழ்வாக ஆற்றிய ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரின் உரை, அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்த பல்வேறு ஊகங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்திருந்தது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு தயாரித்துக் கொடுத்த கொள்கை விளக்க உரையை, ஆளுநர் அர்லேகர் எவ்வித மாற்றமுமின்றி சட்டப்பேரவையில் முழுமையாக வாசித்தார். கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது, அரசு தயாரித்த உரையில் உள்ள சில குறிப்பிட்ட வார்த்தைகளை ஆளுநர் தவிர்ப்பதும், அதற்கு அன்றைய ஆளுங்கட்சியினர் அவையிலேயே எதிர்ப்பு தெரிவிப்பதுமாகப் பல்வேறு விவாதங்களும் அரசியல் மோதல்களும் அரங்கேறி வந்தன.

ஆனால், தற்போதைய புதிய தவெக அரசின் முதல் கூட்டத்தொடரில் அத்தகைய எவ்வித சுணக்கமும் இன்றி, ஆளுநர் மாளிகைக்கும் தலைமைச் செயலகத்திற்கும் இடையே நிலவிய சுமுகமான இணக்கத்தின் காரணமாக, தமிழக அரசு வழங்கிய உரை வடிவம் அப்படியே பேரவையில் வாசித்துக் காட்டப்பட்டது.

க்ட்

ஆளுநர் அர்லேகர் இன்று காலை தனது உரையைத் தொடங்கி, சுமார் 39 நிமிடங்கள் வரை தொடர்ந்து வாசித்தார். இந்த உரையில் 2031-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை நாட்டின் முன்னோடி மாநிலமாக மாற்றுவது, நிதி நெருக்கடி மத்தியிலும் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 உள்ளிட்ட முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, போதையில்லா தமிழகத்தை உருவாக்க முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகளை மூடியிருப்பது, மாநில நலனுக்காகப் புதிய தொழில் கொள்கையை உருவாக்குவது மற்றும் நதிநீர் உரிமைகளுக்காக அண்டை மாநிலங்களுக்கு எதிராகச் சட்டப்போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தவெக அரசின் மிக முக்கியக் கொள்கை பிரகடனங்கள் அனைத்தும் இடம்பெற்றிருந்தன. ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசித்து முடித்ததைத் தொடர்ந்து, அவையில் இருந்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தங்களது மேஜைகளைத் தட்டி பலத்த வரவேற்பை வெளிப்படுத்தினர்.