பர்த் டே கேக் கொடுத்த மாப்பிள்ளையின் தம்பி... சிறுமி ஹேமலதா வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்... சிபிசிஐடி விசாரணை தீவிரம்!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா, கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அன்றிரவே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார். உள்ளூர் காவல்துறையினரின் 8 தனிப்படைகள் அமைத்து 15 நாட்கள் தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில், இவ்வழக்கு விசாரணை தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிபிசிஐடி எஸ்பி மற்றும் டிஎஸ்பிக்கள் கீதா, வேல்முருகன் தலைமையிலான அதிகாரிகள் ஆலம்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைத் தற்காலிக விசாரணை மையமாக அமைத்துத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். சிறுமியின் தாய் பவானி மற்றும் பாட்டி சாந்தி ஆகியோரிடம் அன்றைய இரவில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும், குடும்ப பின்னணி குறித்தும் பல மணி நேரம் விரிவான வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

சிறுமி ஹேமலதாவின் மூத்த சகோதரிக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ள தினேஷின் தம்பி கார்த்தி என்பவர் மீது சிபிசிஐடி பார்வை திரும்பியுள்ளது. சிறுமி மாயமான அக்டோபர் 11ம் தேதியன்று கார்த்தி தான் சிறுமிக்குப் பிறந்தநாள் கேக் வாங்கி வந்து கொடுத்துள்ளார். அவர் கேக் கொடுக்க வந்த நேரம், வீட்டில் தங்கியிருந்த அவகாசம் மற்றும் அங்கு நடைபெற்ற உரையாடல்கள் குறித்துக் கார்த்தி மற்றும் அவரது தாய் அஞ்சலா ஆகியோரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலம்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சந்தேகத்திற்குரிய நபர்கள், பழைய குற்றவாளிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களின் விவரங்களைச் சேகரித்துச் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. சிறுமி கடத்தப்பட்டாரா, குடும்பப் பகையா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா எனப் பல கோணங்களில் தீவிர தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
