ஐ.ஐ.டியில் மீண்டும் சர்ச்சை.. சைவத்திற்கு தனி இடம் ஒதுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!
மும்பையில் உள்ள பவாய் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள 3 விடுதிகளில் சைவம் சாப்பிடும் மாணவர்களுக்கு என தனியாக 6 மேஜைகள் ஒதுக்கப்பட்டது.இதைக் கண்டித்து மாணவர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய ஐஐடி நிர்வாகம் அதற்கு பதிலாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
இதுகுறித்து அம்பேத்கர் பெரியார் புலே வாசகர் வட்டம் ஐ.ஐ.டி நிர்வாகத்தைக் கண்டித்துள்ளது. இதுக்குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஐ.ஐ.டி பாம்பே அதன் உணவு பிரித்தாளும் கொள்கைக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது என கூறியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஐ.ஐ.டி. நிர்வாகம் தரப்பில் நேரடியாக எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. ஆனால் ஐஐடி வளாகத்திற்குள் சாதிய பாகுபாடுகள் காட்டப்படுவதில்லை, உணவு பாரபட்சம் எதுவும் இல்லை என்பதாக தகவல்கள் சொல்லப்படுகிறது. சைவத்திற்கு தனி மேஜை ஒதுக்கப்பட்டுள்ள விவகாரம் பூதாகரமாக உருவெடுப்பதற்கு முன்பாக ஐஐடி நிர்வாகம் தரப்பில் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாணவர் அமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.