"ஹெலிகாப்டரும் வரல, கோஸ்ட் கார்டும் வரல".. அமைச்சரின் முகத்திற்கு நேராக பொங்கியெழுந்த இளைஞர்!

 
அமைச்சர் ஸ்ரீநாத்

மீனவர் விபத்து விவகாரத்தில் மீட்புப் பணிகள் தாமதமானதைக் கண்டித்து, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் துறை அதிகாரிகளை நேரில் முற்றுகையிட்டு இளைஞர் ஒருவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலில் நேர்ந்த விபத்து மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணிகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் காட்டிய அலட்சியத்தைக் கண்டித்து பாதிக்கப்பட்ட மக்களின் கோபமும் கொந்தளிப்பும் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் உயரதிகாரிகள் முன்னிலையிலேயே பொதுமக்களில் ஒருவரான இளைஞர் ஒருவர் மிகக் காட்டமாகச் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அந்த வீடியோவில் அவர் ஆவேசமாக, "மீட்புப் பணிக்காகக் கடலோரக் காவல் படையோ அல்லது ஹெலிகாப்டரோ சம்பவ இடத்திற்கு வரவே இல்லை. யாருமே களத்திற்குப் போகாமல், 'போனோம், போனோம்' என்று பச்சைப் பொய் சொல்கிறீர்கள்.

மீனவர்கள் போராட்டம்

மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தின் அலட்சியத்தால் தான் இந்த 9 உயிர்களும் போயிருக்கு. 'நாளைக்குப் பார்க்கலாம், நாளைக்குச் பார்க்கலாம்' என்று ஒவ்வொரு நாளும் இழுத்தடித்தார்களே தவிர துளியளவும் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை. இவ்வளவு பெரிய விபத்து நடந்தும்கூட, அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? அவர்களை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை?" என அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு அமைச்சரின் முகத்திற்கு நேராகப் பொங்கி எழுந்தார்.

9 உயிர்கள் பறிபோன இவ்வளவு பெரிய பேரிடர் மற்றும் விபத்து நடந்த பிறகும் கூட, துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சகம் தரப்பில் முறையான விளக்கம் அளிக்கப்படாமல் கள்ள மௌனம் சாதிப்பது மீனவ மக்களைப் பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

மீனவர்கள்

பொதுமக்களின் பாதுகாப்பையும் உயிர்களையும் மதிக்காமல் அலட்சியமாகச் செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.