12 உயிர்களைக் காவு வாங்கிய கொடூரம்... பெரியபாளையம் அமோனியா கசிவு ஆலை நிரந்தர மூடல்? முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!

 
அமோனியம் வாயு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பயங்கர அமோனியா வாயு கசிவு விபத்து தொடர்பாக, உயர்மட்ட அதிகாரிகள் குழு தங்களது விரிவான விசாரணை அறிக்கையை இன்று முதலமைச்சர் விஜய்யிடம் நேரில் சமர்ப்பித்துள்ளது.

கடந்த ஞாயிறன்று இந்தத் தனியார் இறால் பதப்படுத்தும் ஆலை இயங்கிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாகக் குழாய்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அமோனியா வாயு கசிந்தது. நச்சு வாயு காற்றில் பரவியதால் ஆலைக்குள் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு அடுத்தடுத்து கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் வாந்தி ஏற்பட்டது.

வாயு மருத்துவமனை

இந்த விபத்தில் சிக்கி இதுவரை மொத்தம் 12 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், நச்சு வாயுவைச் சுவாசித்ததால் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளான 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போதும் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த முதலமைச்சரின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் விபத்து நடந்த ஆலையில் கடந்த சில நாட்களாக தீவிர கள ஆய்வு மேற்கொண்டனர்.

வாயு

தற்போது முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த விசாரணை அறிக்கையில், விபத்து நடந்த அந்த தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையை இனி ஒருபோதும் இயக்க அனுமதிக்கக் கூடாது என்றும், அதனை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அதிகாரிகள் குழு வலுவாகப் பரிந்துரை செய்துள்ளதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பு வழிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. முறையான தகுதிச் சான்றிதழ்கள் இன்றி, தொழிலாளர்களின் பாதுகாப்பில் அலட்சியமாகச் செயல்படும் மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை முற்றிலுமாக மீறும் எந்தவொரு தனியார் நிறுவனமாக இருந்தாலும், அவற்றின் மீது எவ்விதப் பாரபட்சமுமின்றி சட்டப்படியான மிகக் கடுமையான நடவடிக்கைகள் பாயும் எனத் தொழிலாளர் நலத்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.