23-வது நாளாகத் தொடரும் உண்ணாவிரத போராட்டம்... சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உடல்நிலை கவலைக்கிடம்!

 
சோனம் வாங்சுக்

தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்ற அமைப்பின் சார்பில் நடத்தப்பட்டு வரும் தர்ணா போராட்டம் 23-வது நாளை எட்டியுள்ளது. இந்த இயக்கத்தின் போராட்டத்திற்கு ஆதரவளித்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரபல கல்விப்பணியாளரும், சமூக ஆர்வலருமான சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

கல்வித்துறை குளறுபடிகளுக்கு எதிராகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை குறித்து மருத்துவக் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து விபரங்களை வெளியிட்டுள்ளனர். தொடர் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாகச் சோனம் வாங்சுக்கின் உடல் எடை 7.8 கிலோ வரை கணிசமாகக் குறைந்துள்ளதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அவரது தற்போதைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோனம் வாங்சுக்கைப் போலவே, ஏ.ஐ.எஸ்.ஏ. மாணவர் அமைப்பைச் சேர்ந்த நேஹா, மனிஷ், தீபக்குமார் வர்மா, ஆமீன் ஆகியோரும் ஒரு தனி மேடையில் தங்களது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

தேசிய அளவிலான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை விலக வேண்டும் என்று கோரி கடந்த ஜூன் 20-ம் தேதியிலிருந்து ஜந்தர் மந்தரில் இந்தத் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தேர்வு குளறுபடிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி வைத்த விமர்சனத்தை அடிப்படையாகக் கொண்டு, இன்ஸ்டகிராம் சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தத் தனித்துவமான இயக்கத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது. இந்த அமைப்பைத் தொடங்கி, கல்வித்துறையின் சீர்திருத்தங்களுக்காகப் போராடி வரும் ஆப்ஜித் தீப்கே-வின் இந்த முயற்சிக்கு தற்போது இளைஞர்களின் ஆதரவு பெருமளவில் குவிந்து வருகிறது.

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தங்களது அடுத்தகட்டப் போராட்ட வடிவத்தை இந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர். அதன்படி, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நாளான வரும் ஜூலை 20-ம் தேதியன்று, நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியான முறையில் ஒரு  பேரணியை நடத்தக் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்ற இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.