காலைக்கடன் கழிக்க சென்ற போது விபரீதம்.. காட்டு யானை தாக்கி முதியவர் பரிதாப பலி..!!

 
சின்னக்குட்டி

காலைக்கடன் கழிக்க சென்ற முதியவர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம் அருகே உள்ள நரசிபுரம் தனியார் கல்லூரி வளாகத்தின் பின்பகுதியில் உள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியை அதே பகுதியை சேர்ந்த சிலர் காலைக்கடன் கழிக்க பயன்படுத்துகின்றனர். இன்று காலை அங்கு சென்ற சிலர் பலத்த காயங்களுடன் முதியவர் ஒருவர் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

போளுவாம்பட்டி வனச்சரகம்

அதையடுத்து, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, ​​யானை தாக்கியதில் பலத்த காயம் அடைந்து அந்த நபர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வனத்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்தவர் அதே பகுதியை சேர்ந்த சின்னக்குட்டி (73) என்பது தெரியவந்தது.

 யானை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

இந்த நிலையில், யானைகளின் நடமாட்டம் தொடர்வதால் அப்பகுதியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஊராட்சி சார்பில் பொதுக்கழிப்பிடங்கள் கட்டித்தர வேண்டும், வனத்துறையினர் ரோந்து பணியை அதிகப்படுத்தி வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web