”உங்க பையனுக்கு ஆண்மை குறைவு”.. தவறான மருந்தை கொடுத்து இளைஞர் கொலை.. விசாரணையில் அதிர்ச்சி..!!

 
சித்த மருத்துவர் கேசவமூர்த்தி

சித்த மருத்துவர் தவறான மருந்தை கொடுத்து இளைஞரை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் பகுதியைச் சேர்ந்த அசோக் ராஜன் (27) என்பவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 11ம் தேதி தீபாவளி பண்டிகைக்காகச் சென்னையிலிருந்து சோழபுரத்திற்கு சென்றுள்ளார். பின்னர், 12ம் தேதி தீபாவளி பண்டிகையை முடித்துவிட்டு மறுநாள் அவசர வேலையாகச் சிதம்பரம் செல்வதாக வீட்டில் கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் அசோக் ராஜனின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால், பதற்றம் அடைந்த அசோக் ராஜனின் குடும்பத்தினர் சோழபுரம் காவல் நிலையத்தில் கடந்த 14ம் தேதி புகார் அளித்துவிட்டு, அசோக் ராஜனைத் தேடி வந்துள்ளனர். இந்தநிலையில் சோழபுரம் அருகே உள்ள மணல்மேடு கீழத்தெருவை சேர்ந்த சித்த வைத்தியரான கேசவமூர்த்தி என்பவர் வீட்டிற்குக் கடந்த 13ம் தேதி அசோக்ராஜன் சென்றதாக அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

உயிரிழந்த அசோக் ராஜன்

கேசவமூர்த்தி வீட்டிற்குச் சென்று அவர்கள் விசாரித்த போது, “கடந்த 13ம் தேதி இரவு அசோக்ராஜன் என்னை வந்து பார்த்தார். தனக்கு ஆண்மைக் குறைவு உள்ளதால் வாழப் பிடிக்கவில்லை எனக் கூறி அவர் கதறி அழுதார். நான் தஞ்சையில் உள்ள தனக்குத் தெரிந்த மருத்துவரை அணுகுமாறு அவரை அனுப்பி வைத்தேன். நான் அந்த மருத்துவரிடம் நேரில் சென்று விசாரித்துவிட்டு உங்களுக்கு விவரத்தைச் சொல்கிறேன்” எனக் கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து 15ம் தேதி அசோக்ராஜன் குடும்பத்தினரை மீண்டும் சந்தித்த கேசவமூர்த்தி, அவர் தஞ்சைக்கு செல்லவில்லை எனவும், எங்குச் சென்றார் என்பதைத் தேடிக் கண்டுபிடிப்போம் எனவும் கூறி ஆறுதல் சொல்வது போல் நாடகமாடியுள்ளார்.

இந்நிலையில், 16ம் தேதி அசோக்ராஜன் வீட்டிற்கு ஆடுதுறை தபால் நிலையத்திலிருந்து அசோக்ராஜன் எழுதியதாக ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில், “எனக்கு ஆண்மைக் குறைவு இருக்கிறது. அதனால் இந்த உலகத்தில் நான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என எழுதப்பட்டிருந்திருக்கிறது. ஆனால் அந்த கையெழுத்து அசோக் ராஜனுடையது இல்லை என்பதை அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர். மேலும் அந்த கடிதத்தில் கேசவமூர்த்தியிடம், அசோக் ராஜன்  கூறியதாகச் சொன்ன தகவல் எழுதப்பட்டிருந்ததால், சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் கடிதத்தை போலீசாரிடம் ஒப்படைத்து கேசவமூர்த்தியிடம் விசாரிக்குமாறு கூறியுள்ளனர்.

இதனையடுத்து கேசவமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை முடிவில் காவல்துறை தரப்பில், "அசோக்ராஜனுடன், கேசவமூர்த்தி தன்பாலின சேர்க்கையில் ஈடுபட்டாரென சொல்லப்படுகிறது. இதில் அசோக்ராஜனுக்கு, கேசவ மூர்த்தி சித்த மருந்து கொடுத்ததாக தெரிகிறது. அந்த மருந்து வேலை செய்யாமல் அசோக்ராஜன் திடீரென உயிரிழந்துள்ளார். அது வெளியில் தெரியாமல் மறைக்க அவரது உடலை வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையின் அருகே குழி தோண்டி கேசவ மூர்த்தி புதைத்துள்ளார்” எனக்கூறப்பட்டுள்ளது.

கேசவமூர்த்தியையை கைது  செய்து அழைத்து  செல்லும் போலீசார்

இதனைத்தொடர்ந்து திருவிடைமருதூர் டி.எஸ்.பி  ஜாபர்  சித்திக் தலையிமைலான போலீசார் தடயவியல் நிபுணர்களுடன் இன்று கேசவமூர்த்தியை அழைத்துக் கொண்டு அவரது வீட்டிற்குச் சென்று, அசோக்ராஜனை புதைத்த இடத்தை அடையாளம் கண்டுள்ளனர். கோட்டாட்சியர் பூர்ணிமா முன்னிலையில் அசோக் ராஜன் உடலைத் தோண்டி எடுத்து மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை செய்தனர். பின்னர் அசோக் ராஜன் உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இது தொடர்பாக கேசவ மூர்த்தியைக் கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்தவைத்தியரான கேசவமூர்த்தி இளைஞர் அசோக்ராஜனை கொலை செய்து வீட்டின் பின் புறம் புதைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web