யூ-ட்யூபில் மாற்றுத்திறனாளிகளைக் கேலி செய்த விவகாரம்.. நகைச்சுவை கலைஞர் சமய் ரெய்னா உட்பட 5 பேருக்கு தலா ₹3 லட்சம் அபராதம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

 
சமய் ரெய்னா

யூடியூப் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை இழிவாகப் பேசி கேலி செய்த விவகாரத்தில், பிரபல நகைச்சுவை கலைஞர் சமய் ரெய்னா உள்ளிட்ட 5 பேருக்குத் தலா ₹3 லட்சம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு யூடியூப் தளத்தில் 'இந்தியாஸ் காட் லேட்டண்ட்' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் சமய் ரெய்னா மற்றும் சக நகைச்சுவை கலைஞர்கள், பார்வையற்றவர்கள், கண் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளை மிகவும் இழிவாகப் பேசி, நகைச்சுவை என்ற பெயரில் கேலி செய்துள்ளனர்.

இதற்கு நாடு முழுவதும் பொதுமக்களிடையேயும், சமூக ஆர்வலர்களிடையேயும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 5 பேர் மீதும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்ற உத்தரவை மதிக்காத கலைஞர்கள்ந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்குச் சம்மன் அனுப்பியதோடு, தங்களது செயலுக்குச் சமூக வலைதளங்களில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. ஆனால், நீதிமன்ற உத்தரவை மதித்து அவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இவ்வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்சி, ஜே.வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து , "நீதிமன்றத்தின் முன்னிலையில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளுக்கும், சமய் ரெய்னாவின் தற்போதைய செயல்பாடுகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அவர் நீதிமன்றத்தை ஏமாற்றி விளையாடியுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் சமய் ரெய்னா மற்றும் அவருடன் தொடர்புடைய விபுல் கோயல், பால் ராஜ் காய், சோனாலி தாக்கர், நிஷாந்த் தன்வார் ஆகிய 5 நகைச்சுவை கலைஞர்களுக்கும் தலா ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதனை 2 வார காலத்திற்குள் செலுத்த வேண்டும்; தவறினால் அபராதத் தொகை உயர்த்தப்படும்."

மேலும், தவறிழைத்த ஐந்து நகைச்சுவை கலைஞர்களும் தங்களது அநாகரிகமான செயலுக்குப் பகிரங்கமாகப் பொது மன்னிப்பு கோர வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். நகைச்சுவை என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியவர்களுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள இந்த அபராதம், இணையவாசிகளிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.