விவாகரத்து கிடைத்த மகிழ்ச்சி... 9 கி.மீ ரோட்டில் உருண்டபடியே 'தண்டவ யாத்திரை' சென்ற இளைஞர் - வினோத நேர்த்திக்கடன்!
பொதுவாகத் திருமணம் நடப்பதற்கோ அல்லது குழந்தை வரம் கிடைப்பதற்கோ தான் மக்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் ஒரு இளைஞர் தனது திருமண வாழ்க்கை முறிந்ததைக் கொண்டாடும் விதமாகச் செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும், அவரது மனைவிக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தொடர்பான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இந்த வழக்கில், சமீபத்தில் அந்த இளைஞருக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைத்து, விவாகரத்து உறுதி செய்யப்பட்டது.
இந்தச் சட்டப் போராட்டத்தில் இருந்து தனக்கு 'விடுதலை' கிடைத்ததை ஒரு வெற்றியாகக் கருதிய அந்த இளைஞர், தனது ஊரில் உள்ள புகழ்பெற்ற கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த முடிவு செய்தார். வெறும் நடைப்பயணமாகச் செல்லாமல், அந்த இளைஞர் சுமார் 9 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலையிலேயே உடல் முழுவதும் தரையில் படும்படி விழுந்து வணங்கிச் செல்லும் 'தண்டவ யாத்திரை' மேற்கொண்டுள்ளார். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தனது நேர்த்திக்கடனை அவர் முழுமையாக நிறைவேற்றினார்.
இளைஞர் ஒருவர் விவாகரத்து கிடைத்ததற்காக இப்படிச் சாலையிலேயே புரண்டு செல்வதைக் கண்ட அப்பகுதி மக்கள், அதனைத் தங்களது செல்போன்களில் படம்பிடித்தனர். தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் கலவையான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். "திருமண வாழ்க்கை அந்த அளவிற்கு அவருக்கு நரகமாக இருந்திருக்கும் போலிருக்கிறது" எனச் சிலர் பரிதாபப்படுகின்றனர். "விவாகரத்தைக் கொண்டாடும் கலாச்சாரம் தற்போது அதிகரித்து வருகிறது" எனச் சிலர் சமூக மாற்றத்தைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
